பரிபூர்ண சரணாகதி. ஆழ்வார்கள் எல்லாரும் நாமோ பரிபூர்ணமா சரணாகதி அடையணும்னு எவ்ளோ தெளிவான வழியைக் காட்டிருக்கா.
'உன்தன்னோடுறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது' - அப்டிங்கறா கோதை நாச்சியார். ஏன்னா இது ஜீவாத்மா பரமாத்மா சம்பந்தம். தேகம்கறது நம்மளோட கர்ம பலன்களால் ஏற்படறதே ஒழிய, ஆத்மாங்கறது அவனோடதாச்சே. அத தானே நாமோ அபஹரணம் பண்ணிண்டு வந்திருக்கோம். இதை மறுபடி மறுபடி சொல்றதுக்கு காரணம், லோகாயதமான ஆசைகளும் கடமைகளும் நம்மளை விடப்போறதில்லை. நம்மளோட பூர்வ ஜென்ம கர்மாக்கள் நம்மளை சுத்தி ஒரு மாயையை உண்டாக்கி இங்கேயே உழண்டுண்டு இருக்கப் பண்ணும். விரக்திங்கறது மனசுல வர்ற வரைக்கும் இங்கேர்ந்து தப்பிக்க முடியாது. விரக்தி வர்றதுங்கறது சாதாரண விஷயமில்லே. 'ந இதம் மம' - இது என்னுது இல்ல. இது என்னுது இல்ல அப்படின்னு மனசுல ஆழ ஊணினா தான், நம்மளோடதுன்னு இங்கே எதுவுமே இல்லேன்னு நன்னா புரியும். அப்போ நாமெல்லாம் இங்கே ஏன் ஒக்காந்துண்டிருக்கோம் அப்படிங்கற கேள்வி மனசுல எழும். இதை தான் பெரியவா 'ஆத்ம விசாரம்' (self introspection) அப்டிங்கறா.
நம்மளோட மனசு தெளிவு பெரறதுக்காகவே திருமழிசைப்பிரான் சாதிக்கறதை சேவிப்போம்.
'இனியறிந்தே னீசற்கும் நான்முகற்கும் தெய்வம்
இனியறிந்தேன் எம்பெருமான். உன்னை - இனியறிந்தேன்
காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ, நற்கிரிசை
நாரணன்நீ நன்கறிந்தேன் நான்'
'காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ' - எல்லாமே அவன் தான் அப்டிங்கறதை இதை விடவும் தெளிவா நிஷ்கர்ஷை (explain - detailing - giving clarity) பண்ண முடியுமா வேறொன்னால? இந்த ஒசத்தியான அறிவு ப்ரஹ்லாதனுக்கு இருந்ததுனால தானே, எல்லாமே ஸ்ரீமன் நாராயணன் தான் அப்டிங்கறதுல அவன் த்ருடமா நின்னான் - கர்பவாசத்துலேர்ந்து ந்ருஸிம்ஹன் அவதரிக்கற வரை. அவனோட மனசுல ஸ்ரீமன் நாராயணன் தான் பரதேவதை அப்டிங்கறதுல ஒரு க்ஷணார்த்தம் துளியளவு கூட சம்சயம் வரலையே. இது தானே மஹாவிஷ்வாசம். இது தானே சரணாகதி.
'மேலையார் செய்வனகள் வேண்டுவன' அப்படிங்கற ஸ்ரீ ஆண்டாளோட திருவாக்கின் படி, நம்மளோட பெரியவா காட்டின வழிலே நடந்துக்கறது தானே சிஷ்யாளோட தர்மம். தடம் மாறிப் போனோம்னா, இவ்ளோ ஒசத்தியான ஆழ்வார் ஆசார்யாள் திருவடிகள்னு நம்மளை நாமளே சொல்லிக்கறதுலே ஏதாவது அர்த்தம் இருக்கா? அவன் தானே.. அவன் மட்டும் தானே நமக்கு புகல். அப்படி இருக்கறது மட்டும் தான் நம்மளோட ஸ்வரூபத்துக்கு (basic identity) அழகு.
பரிபூர்ண சரணாகதி அப்படிங்கறது ஏற்படறப்போ, பெருமாள் மேல ஈடுபாடு எவ்ளோ ஒசந்த நிலையை எட்டிடறதுன்னு புரிஞ்சிக்கனும்னா, ஆழ்வார்களோட பாசுரங்களை சேவிக்கணும்.
நாமெல்லாம் பெருமாள் கோயில்களுக்குப் போறோம். நம்மள்ல பல பேர் கோவில்களுக்கு போறது நல்ல பழக்கம்னு போறோம். தப்பில்லே. சரி தான். இன்னும் சில பேர் ஒரு குறிப்பிட்ட கோவில், அங்கே ஏள்ளிருக்க பெருமாள் மேல பரம அபிமானத்தோட இருப்பா. வேறெந்த கோவில் எம்பெருமானோட திருமுகமும் விஷயங்களும் அவாளுக்கு ருசிக்காது. நம்மள்ல மூணாவது வகையறா, மனசுல நெறய்ய பாரத்தோட, நம்மளோட பிரச்சனைகளுக்கு ஏதாவது தீர்வு கிடைக்காதா அப்படின்னு கோவில்கள்ள பண்ணிண்ட பிரார்த்தனைகளை நிறைவேத்தப் போறோம். இன்னும் பல பேர் இவ்ளோ திவ்யதேச எம்பெருமான்களை சேவிச்சிருக்கோம் அப்படிங்கற கணக்கை நேர்படுத்தப் போறோம். பெருமாளை அனுபவிச்சு சேவிக்கறவா பலர் பெருமாளோட திருமுக மண்டலம் திருவடிகள்னு ரசிச்சு சேவிக்கறோம்.
இவ்ளோ விதமான சேவிப்புகள் எல்லாத்தயும் தாண்டி, ஆழ்வார் சேவிக்கற அழகை அனுபவிக்கலாம். பக்தியோட உச்சம். சரணாகதியோட உச்சம். திருமங்கையாழ்வார் நாகை சௌந்தரராஜப் பெருமாளை சேவிக்கப் போறார். அந்தப் பெருமாளோட அழகை எவ்ளோ ப்ரத்யக்ஷமா கண்டிருக்கார்னா, அங்கலாய்ச்சுக்கறார். அவரால தன்னோட அங்கலாய்ப்பை அடக்கிக்க முடியல.
"பொன்னிவர் மேனி மரகதத்தின்
பொங்கிளஞ் சோதி யகலத்தாரம்
மின் இவர் வாயில் நல் வேத மோதும்
வேதியர் வானவ ராவர் தோழி
என்னையும் நோக்கியென் னல்குலும் நோக்கி
ஏந்திளங் கொங்கையும் நோக்குகின்றார்
அன்னையென் னோக்குமென் றஞ்சு கின்றேன்
அச்சோ அழகிய வா?!"
அச்சோ அழகிய வா?!.... அச்சோ அழகிய வா?!.... எவ்ளோ ரசிக்கறார். அச்சோ... அச்சோ.. இந்த வார்த்தை பிரயோகம். 'ஐயோ' அப்படிங்கற தமிழ் வார்த்தைக்கு இணையா எடுத்துண்டா, அந்த உருக்கத்தோட அளவு இன்னும் நன்னா புரியறதே. எவ்ளோ உருகறார். அப்போ அந்தப் பெருமாளண்ட அவருக்கு மனசு எவ்ளோ லயிச்சிருக்கணும். அந்தப் பரமன் மேல இருந்த மஹாவிஷ்வாசம்... நாயகி பாவத்துலே அவனோட அழகை ஒவ்வொரு துளியும் அனுபவிக்கப் பண்றது.
கோவில்களுக்கு போறப்போ, பெருமாளோட திருவடிகளை கண்ணார சேவிச்சுண்டே மனசார நெனைச்சுக்கணுமாம் - இந்தத் திருவடிகள் தானே நம்மளை கரை சேர்க்கப் போறதுன்னு. நெனைச்சுக்கற மாத்திரத்திலே கண்ணுலே ஜலம் அருவியாய் பெருகறதே. அது தானே ஆத்மார்த்தம். நம்மள்ட்டேர்ந்து அத மட்டும் தானே அவன் எதிர்பாக்கறான். அப்பிடி நெனைச்சுக்கற மாத்திரத்திலே ஜீவாத்மாக்களாகிய நாமெல்லாம் அசக்தர்கள். கர்மபத்தர்கள். அவன் பரமாத்மன். சக்திமான். கர்மாதீதன் அப்படின்னு நம்மளோட மனசு உணர்ந்ததுக்கான அடையாளமாயிடறதே. இந்தப் பக்குவம் வந்துட்டா த்ருடம் வந்துடும். அவன் பேர்லே மாறாத விஷ்வாசம் வந்துடும். வேறெந்த தேவதாந்த்ரங்களையும் நாடிப் போமாட்டோம். இது தான் நிஜமான சரணாகதி.
ப்ரஹ்லாதனுக்கு உண்டான விஷ்வாசம். அவன் அவனோட அம்மாவின் கர்பத்துலே வாசம் பண்ணின காலத்துலேர்ந்தே வேறாரயாவது ஸ்துதி பண்ணினானா? ஸ்ரீமன் நாராயணன் ஒருத்தன் தான் பரதேவதை அப்படின்னு த்ருடமா இருந்தானே. அதுலே அவனுக்கு கடுகளவும் சந்தேகமே வரல்ல. அந்த த்ருடம் தானே அவனை கரை சேர்த்தது. அவன் கேட்டது கேக்காததுன்னு எல்லா ஒசத்தியானதையும் அனுக்கிரஹம் பண்ணித்து. ந்ருஸிம்ஹனோட சேவை ஆப்ட்டுதே அவனுக்கு. அதுக்கு மேல வேறென்ன வேணும். ந்ருஸிம்ஹா... ந்ருஸிம்ஹா... நாடினேன்; நாடி நான் கண்டு கொண்டேன்.. உன்தன்னோடுறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது... உன் தாள் கண்டு கொண்டு என் சிரம் மேல் சூடிக் கொண்டேன்... சரணாகதோஸ்மி... காப்பாத்து