அன்னாபிஷேகம் ஸ்பெஷல் ! 12.11.19 !
ஐப்பசி பௌர்ணமி - ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம்!
சாம வேதத்திலே ஒரு இடத்தில் “அஹமன்னம்,
அஹமன்னம், அஹமன்னதோ” என்று
கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும்
நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அமுது படைக்கும்அந்தஆண்டவனுக்கே அமுதுபடைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். சிவன் பிம்பரூபி, அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம் திருப்தி பெறும். அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்ன பூரணியை தனது வாம பாகத்திலேக் கொண்ட அந்த மாதொரு பாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.
தில்லையிலே அனுதினமும் காலை பதினோறு மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடினார். இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.
ஆகமத்தில் அன்னாபிஷேகம் :
ஆலயவழிபாட்டில்பௌர்ணமியன்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நடசத்திரத்திற்க உரிய பொருளால் சிவபெருமானை வழிபடுவது விஷேமானதாகும். ஐப்பசி மாதம் இவ்வாறே அஸ்வினி நட்சத்திரத்திற்குரியஅன்னத்தால் வழிபடுவது சிறப்பானது.அதை ஏன் ஐப்பசி மாத பௌர்ணமியில் செய்ய ணேவ்டும்? மற்ற மாதங்களில் செய்யலாமே? ஐப்பசி மாதப் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறான்.
அது என்ன சாபம்?தெரிந்த கதைதான். சந்திரன், அஸ்வினி முதல் ரேவதி வரையிலான தனது நட்சத்திர மனைவியருள் ரோகிணியிடம் மட்டும் தனி அன்பு செலுத்தி மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டியதால், மாமனார் தட்சனால் உடல் தேயட்டும் என்று சாபம். சந்திரனுக்கும் ஒவ்வொரு கலையாக தேய ஆரம்பித்தது. அவன் மிகவும் வருந்திக் கெஞ்சவே, திங்களூரில் சிவனை பூஜித்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்றார், தட்சன். உடனே அவன் திங்களூர் வந்து சிவனை நோக்கி தவம் செய்யத் துவங்கினான். அவன் மேனியின் ஒளி நாளுக்கு நாள் மங்கத் துவங்கியது. மூன்றே மூன்று கலைகள் மிச்சமிருக்கும் போது சிவனார், அவன்பால் மனமிரங்கி அந்தப் பிறையைத் தனது தலையில் அணிந்து கொண்டார்.
கொடுத்த வாக்கை மீறிய அவனுக்கு பதினாறு கலைகளும் கிடைக்கப் பெற்றாலும் முழுப்பொலிவும் வருடத்தின் ஒருநாள் அதாவது ஐப்பசி பௌர்ணமி அன்று மட்டுமே கிடைக்கும். அது மட்டுமல்ல அவனது ஒளி தினமும் தேயும் முழுவதும் மறைந்து பின் படிப்படியாக வளரும். இது எப்போதும் நடக்கும் ஒரு சுழற்சியாக இருக்கும் என்று அருளிச் செய்தார் விடைவாகனர். திங்கள் முடிசூடியவருக்கு, மதி முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வதுதானே சிறப்பு!
ஆன்மிக ரீதியாக மட்டுமன்றி அறிவியல் ரீதியாகவும் இதற்கு ஆதாரம் இருக்கிறது. அக்டோபர் (ஐப்பசி) மாதத்தில்தான் நிலவு, பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுகிறது என்கிறது வானவியல். நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. இதை உணர்ந்த நமது ரிஷிகள் அந்த மாதத்தில் அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்று கண்டறிந்து நடைமுறைப்படுத்தினார்கள்.
முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது. சிவன் பரம்பொருள், அவனது பிரதிபிம்பமே அனைத்து ஜீவராசிகளும், இரண்டும் வேறல்ல. அபிஷேக அன்னப்போர்வையால் ஐயன் அகமும் புறமும் குளிரும் போது எல்லா ஜீவராசிகளும் அவனது பேரருட்கருணையினல் குளிர்வது இயற்கைதானே.
அன்னத்தின் சிறப்பு :
ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகின்றது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகின்றது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகின்றது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கை. இந்த அன்னம் அபிஷேக நிலையில் ஆண்டவன் மேனி முழுவதும் தழுவி அவனை அகப்ப்டுத்தி அடைக்கலமாகின்றது. அதன் மூலம்
ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பது புலனாகின்றது.எனவே அவனே பரம்பொருள்
என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது..
சிவபுராணத்தில் உள்ள ஒரு கதை உணவின் முக்கியத்துவத்தைக் கூறுகிறது. இவ்வுலகில் உள்ளோர் எல்லோரும் உணவு உண்டார்களா தெரியவில்லையே எனச் சந்தேகம் எழுப்பினாராம் பார்வதி தேவி சிவபிரானிடம். அனைவரும் இன்றைய பொழுதில் உணவு உண்டாகிவிட்டது என்று பதில் கூறினாராம் சிவன். இங்கே, கைலாயத்தில் என்னுடனேயே தங்கி இருக்கும்போது, இது தங்களுக்கு எப்படித் தெரியும் என்று தேவி கேட்க, யாம் அனைத்தையும் அறிவோம் என்கிறார் சிவன். இதனைச் சோதிக்கப் பார்வதி தேவி முடிவு செய்கிறார். மறுநாள் சிறிய தங்கச் சம்படத்தில் எறும்பு ஒன்றைப் போட்டு அடைத்துவைத்தாள் தேவி. பின்னர் மதிய வேளையின்பொழுது, அனைவருக்கும் உணவு கிடைத்ததா என்று தேவி கேட்க, என்ன இது தினமும் கேட்க ஆரம்பித்துவிட்டாய், அனைவரும் உண்டார்கள் என்று பதிலிறுத்தார் சிவன். தன் புடவைத் தலைப்பில் சம்படத்தை முடிந்து வைத்திருந்த தேவி, அதனை எடுத்துத் திறந்தபடியே, இதில் இருக்கும் எறும்பும் சாப்பிட்டதா என்று கூறியபடியே அப்பாத்திரத்தினுள் பார்க்க, அதில் இருந்த அரிசியை எறும்பு உண்டுகொண்டிருந்தது. திகைத்தாள் பார்வதி. கல்லுக்குள் தேரைக்கும், கருப்பை உயிற்கும் உள்ளுணர்வே தரும் தயாபரன் சிவன்.
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் திருக்கோயில் மூலவராகச் சுமார் பதிமூன்று அடி உயரமும், அறுபத்து மூன்று அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லிலான மிகப் பெரிய சிவலிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தை முழ்கடிக்கும் அளவிற்குச் சுமார் நூறு மூட்டை அரிசியில் அன்னம் செய்து, அதனை அன்னாபிஷேகமாகச் செய்வது வழக்கம்.
அன்னாபிஷேகம் செய்யும் முறை:
ஐப்பசி மாத முழுநிலவு நாளில் முதலில் ஐந்து வகைப் பொருட்களால் இறைவனுக்க அபிஷேகம் செய்து, பின்னர் நன்கு வடித்து ஆறவைத்த அன்னத்தைக் கொண்டு (தேவையானால் சற்று நீர் கலந்து) அன்னாபிஷேகம் செய்யப்படும். சமீபகாலமாக அன்னாபிஷேகத்தின் போது அப்பம், வடை உள்ளிட்ட பலகாரங்களையும் காய்கறி, கனி வகைகளையும் கொண்டு லங்காரம் செய்வது வழக்கமாயிருக்கிறது.
சிவலிங்கத் திருமேனியின் மேலிருந்து அன்னத்தை வைத்துக் கொண்டே வருவார்கள். சிவலிங்கத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். கீழ்ப்பகுதி, பிரம்ம பாகம். நடுப்பகுதி, விஷ்ணு பாகம். இதுவே ஆவுடை. மேற்பகுதி பாணம், சிவபாகம். அன்னாபிஷேகம் சிவலிங்கத் திருமேனியின் எல்லா பாகங்களுக்குமாக முழுமையாகவே செய்யப்படும்.
இந்த அபிஷேகம் மட்டும்தான் இரண்டு நாழிகை நேரம், அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அப்படியே வைக்கப்பட்டிருக்கும். அந்தச் சமயத்தில் யஜுர் வேத பாராயணமும், ருத்திரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணமும் நடைபெறும். நாழிகை நேரம் முடிந்த உடன் அன்னத்தை அகற்றி விடுவார்கள். பின்னர் ஐந்து வகைப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும்.
ஒவ்வொரு அன்னப் பருக்கையும் சிவரூபமாக இருப்பதாகப் பேரூர் புராணம் தெரிவிக்கிறது.
லிங்கத்தின் ஆவுடையிலும் பாணத்தின் மீதும் சாத்தப்பட்ட அன்னம் மிகவும் கதிர்வீச்சுடன் இருக்கும். எனவே அதனை எவரும் உண்ணாமல் அப்படியே எடுத்துச் சென்று கோயில் குளத்திலோ இல்லை ஆற்றிலோ கொண்டு கரைப்பார்கள். நீர்வாழ் உயிர்களுக்கு உணவு!
நமது இந்து மதம் எப்போதும் மனிதனை மட்டுமே முன்னிறுத்தி எதையும் இறைவனிடம் வேண்டுவதில்லை. எல்லா உயிரினங்களும் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் தான் மனிதனுக்குத் தேவையான உணவு
தடையின்றிக் கிடைக்கும் என்பதை
இயற்கையின் சமன்பாட்டு விதியை நன்கு அறிந்திருந்தனர் நம் முன்னோர்.
அதனால்தான் அன்னாபிஷேகப் பிரசாதம் நீரில் வாம் புழு, பூச்சிகள், மீன்கள், மற்ற நீர் வாழ் உயிரினங்கள் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டு நீரில் கரைக்கப்படுகிறது. நல்ல அதிர்வுகளும், உடலுக்குத் தேவையான கதிர் வீச்சுகளும் நிறைந்திருக்கும் பிரும்ம பாகத்தில் சாத்தப்பட்ட அன்னம் மனிதர்களுக்கே அளிக்கப்படுகிறது. ஏனெனில் அவற்றைத் தாங்க சிறு உயிர்களால் முடியாது என்ற ஜீவகாருண்யமே காரணம்.
வெள்ளை அன்னம் சாப்பிடக் கூடாது என்பதால், பிரசாதமாக வினியோகிக்கப்படும் அன்னம் சாம்பார், தயிர், மோர் ஆகியவற்றுடன் தனித்தனியே கலக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகிக்கப்படும் .இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதிகம்.
அன்னாபிஷேகப் பலன்கள்:
சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று ஒரு பழமொழி உண்டு. அது பொதுவாக, எந்த வேலையும் செய்யாமல் ஓசிச் சோறு உண்டு வெட்டியாக காலம் கழிப்பவரைக் குறித்துச் சொல்லப்படுவதாக இருக்கிறது. ஆனால் உண்மைப் பொருள் அதுவல்ல. சோறாகிய அன்னத்தை அதாவது அன்னாபிஷேகத்தைக் கண்டவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பதே காலப் போக்கில் இவ்வாறு மாறிவிட்டது.
வியாபாரத்தில் பிரச்னை இருப்பவர்களும், நஷ்டமடைந்தவர்களும் அன்னாபிஷேகத்தை தரிசித்துப் பிரசாதத்தை உண்டால் வியாபாரம் நிமிரும். பள்ளிக் குழந்தைகளுக்கும் ஏற்றது இது. சில குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள். ஆனால் தேர்வு நேரத்தில் எல்லாம் மறந்து போகும். அந்தக் குழந்தைகள் அன்னாபிஷேகப் பிரசாதத்தை உண்டால் எல்லாம் நன்றாக நினைவில் நிற்கும்.
வீட்டில் லிங்கம் வைத்திருந்தும் நித்ய வழிபாடுகள் செய்யாதவர்கள் இல்லை செய்ய இயலாதவர்கள் வருடத்தில் ஒரு நாள் அன்னாபிஷேக தரிசனம் செய்து பிரசாதம் உண்டு, சிவபூஜை செய்யாததால் ஏற்படும் தோஷத்தைப் போக்கிக் கொள்ளலாம்.
நீண்ட நாடளாக குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள் அன்னாபிஷேகத்தைக் கண்ணாரக் கண்டு பிரசாதம் உண்டால் குழந்தை பிறக்கும்.
பொதுவில் சிவப் பிரசாத அன்னத்தை உண்போர்க்கு என்றைக்குமே உணவுக்கு தட்டுப்பாடு என்பதே வராது. வீட்டில் எப்போதும் தானியங்கள் மிகுந்து இருக்கும்.
அன்னாபிஷேகப் பிரசாதத்தை உண்டால் தோற்றப் பொலிவும், தன் நம்பிக்கையும் கை வரப் பெறும். அன்னாபிஷேகம் குறைவின்றி நடந்தால் அந்த வருடம் முழுவதும் நல்ல விளைச்சல் இருக்கும், ஊர் செழிக்கும், கலைகள் வளரும், மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள் என்பது நம்பிக்கை.
இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது அன்னாபிஷேகம் என்பது மிகவும் தொன்மை வாய்ந்தது. பாரம்பரியச் சிறப்புடையது என்பது நன்று விளங்குகிறது.!
🐜🐜சிற்றெறும்பு முதல்
குஞ்சரக் கூட்ட முதலான தவ
கோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினை
குறையாமலே கொடுக்கும் அந்த
சர்வேஸ்வரனை அன்னாபிஷேக கோலத்தில் (வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் ) கண்டு தரிசித்து,ஆலயம் தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற நம்மால் முடிந்த உதவி செய்து நன்மையடைவோமாக.
திருச்சிற்றம்பலம் !!! இனிய சிவ காலை வணக்கம் நண்பர்களே